செல்வபிரகாஷ்

செல்வபிரகாஷ்
Published on

சேலம் சுகவனேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான ராஜேஸ்வரி யானையைக் கருணை கொலை செய்யச் சொல்லி சென்னை  ஐகோர்ட் உத்தரவு, ஒடிசா காட்டுப்பகுதியில் ரெயிலில் மோதி அடிபட்டு இறந்துகிடந்த யானை படக்காட்சி, இலங்கையில் புத்தபிக்கு யானைக்கு ஆசிர்வாதம் செய்தது. இந்த மூன்று சம்பவங்களும் சமீபத்தில் ஒரேநாளில் யானைகளுக்கு நடந்த தற்செயல் நிகழ்வுகளாக செய்தித்தாளில் வெவ்வேறு பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வுகள்  யானைகளின் வாழ்க்கைச் சித்திரத்தை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றன.

யானைகளின் வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகளில் ஒன்றான தமிழ்நாட்டு கோயில் யானைகளின் வாழ்க்கைப் பயணத்தையும் பாகன்களுடனான உறவுப் பிணைப்பையும் கடந்த ஐந்து வருடங்களாக  புகைப்படமாக ஆவணப்படுத்தியுள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செல்வபிரகாஷ். 

இந்திய கடற்கரைப் பகுதிகளில் நடக்கக் கூடிய சமூக, பொருளாதாரம் மற்றும், அரசியல், பண்பாட்டை புகைப்படமாக ஆவணப்படுத்தியதற்கு ‘நேஷனல் பவுண்டேஷன் ஆப் இந்தியா' சார்பில் புகைப்படத்துக்கான மீடியா பெல்லோஷிப் வாங்கியிருக்கிறார். மேலும் பல்வேறு சர்வதேச பத்திரிக்கைகளிலும், கண்காட்சிகளிலும் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றியிருக்கின்றன. சமீபத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் கோயில் யானைகள் பற்றிய இவரது புகைப்படம் சார்ந்த உரையாடல்  நியூயார்க் டைம்ஸ் இணையத்தளத்தில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது, 

‘‘ 2013ல் கோயமுத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோர காட்டுப்பகுதியில் நடந்த கோயில் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்றேன். யானைகளையும் பாகன்களையும் ஒன்றாக சேர்த்து நிற்க  வைத்து உருவப்படங்கள் எடுத்தேன். 

அடுத்ததாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியுடன்  ஓர் இரவில் லாரியில் ஏறி முகாமுக்கு பாகனுடன் பயணம் செய்தேன்.

நான் லாரியின் முன்பக்க இருக்கையில் இருந்தேன். காந்திமதியை லாரியின் பின்பக்கம் ஏற்றிருந்தார்கள். கோவில்பட்டி தாண்டிச் செல்லும்போது யானை வித்தியாசமான குரலில் சத்தமாக பிளிறியது. லாரியில் யானைப்பாகனுடன் சேர்ந்து உட்கார்ந்திருந்தாலும் காட்டுக்குள் இருப்பதுபோன்ற சூழலே எனக்குத்  தோன்றியது. இடையில் தேநீர் குடிக்க இறங்கியபோது. ஏன் யானை இப்படிச் சத்தம்போடுகிறது. என்று பாகன் தர்மரிடம்  கேட்டேன். அதற்கு தர்மர் இந்தச் சாலையில் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டருக்குள் இன்னொரு யானை லாரியில் வந்துகொண்டிருக்கலாம். அதனுடைய உடல் வாசத்தை நம் யானை உணர்ந்துவிட்டது. அதனால்தான் அப்படி கூப்பிடுகிறது. அதேபோல் அந்த யானையும் இதேமாதிரி பிளிறும். அந்த சத்தம் நம்ம காதுகளுக்குக் கேட்காது. ஆனால் யானைக்குக் கேட்கும் என்று தர்மர் சொன்னார்.    பொதுவாக யானைக்கும் பாகனுக்குமான தொடர்பு சாதாரணமான பிணைப்பாக இல்லை. அதையும் தாண்டி இருவருக்கும் ஒர் உணர்வுப்பூர்வமான பந்தம் உள்ளது. முகாமில் ஒரு பாகன் யானையின் பின்பக்க வாலை பிடித்து கூட்டிக்கொண்டு போகும் படம் எடுத்திருக்கிறேன். இந்த உறவு கம்பை கையில் வைத்து மிரட்டினால் மட்டுமே வராது. சின்ன வயதிலிருந்தே பாகன்களுக்கு விலங்குகளின் மீது ஒரு ஆர்வம் இருக்கிறது. அந்த விருப்பத்தின் காரணமாகதான் யானையோடு வாழ்கிறார்கள்.  பிறந்ததிலிருந்தே யானையோடுதான் வளர்கிறேன். என் நண்பர்கள் நாயை செல்லப் பிராணி என்றால் நான் யானையை செல்லப்பிராணி என்பேன் என்று என்னிடம் ராஜேஷ் என்ற பாகன் சொன்னார்.   

பாகன்களுடன் யானை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால் என் பதில் தெரியாது என்பதே. ஆனால் என்னிடம் முகாமில் எடுத்த ஒரு புகைப்படம் இருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் ஒரு பாகன் யானையின் வயிற்று பகுதியின் மேல் படுத்து உறங்குவார். இந்த புகைப்படத்தை ஓர் ஆய்வாளர் பார்த்தபோது ‘‘யானை சாதாரணமாக இப்படி  ஒரு பக்கமாக சாய்ந்து படுக்காது. ஒரு இடம் பாதுகாப்பாக உணர்ந்துவிட்டால்தான் அங்கே சாய்ந்து படுக்கும். இந்தப் புகைப்படத்தில் உள்ள காட்சி இரண்டுபேருக்குமான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டில் கோயில்களில் இருக்கும் யானைகளுக்கு தொடர்ந்து புத்துணர்வு முகாம் நடத்துவது ரொம்ப முக்கியமாக எனக்குப்படுகிறது. இல்லையென்றால் ஒரு யானை இன்னொரு யானையைப் பார்க்க வாய்ப்பே இல்லாமல் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதுவரும்.'' என்று கூறினார். 

தமிழ்நாட்டில் எப்போதுமே ஒவ்வொரு கோவில்களிலும் யானைகள்  தனியாகதான் வசித்து வருகின்றன. எந்த யானையும் தன் இனத்தைப் பார்க்காமலே தன் வாழ்நாள் பயணத்தை கோயிலிலே முடித்தும்கொள்கிறது. ஆனால் இந்த முகாமுக்குப் பிறகுதான் அதுவும் சமீபத்தில்தான்  யானைகளை ஒன்றாக சேர்ந்து வைக்கும் ஏற்பாடுகள் மெதுவாக நடக்க ஆரம்பித்திருக்கிறது.. குறிப்பாக திருநெல்வேலி ஆழ்வார்திருநகர் கோவில் யானை, இரட்டை திருப்பதி கோவில் யானை மற்றும் பக்கத்திலுள்ள இன்னொரு கோவில் யானை ஆகிய மூன்று யானைகளையும் ஆழ்வார்திருநகர் கோயிலில் ஒரே இடத்தில் ஒன்றாகச் சேர்ந்து வைத்துள்ளார்கள்.   நான் பார்த்தவரையில் உணவுகளிலும் நிறைய மாற்றங்கள் நடத்திருக்கின்றன. உணவாக தென்னை மட்டைகளை மட்டும் போடாமல் வெவ்வேறு விதமான புல் மற்றும் இலைகளை உணவாக கொடுக்கிறார்கள். பேரிச்சம்பழத்தை ஊறவைத்தும் கொடுக்கிறார்கள். இதுபோக வனஅதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை சொல்லுகிறார்கள். 

  ஒரு யானையின் நலன் என்பது யானைப் பாகனுடைய சமூக பொருளாதாரச் சூழலைப் பொறுத்துதான் நிர்மாணிக்கப்படுகிறது. ஆகையால் அரசோ, கோயில் நிர்வாகமோ பாகனின் வருமானத்திற்கு பொறுப்பேற்று அவர்களது சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யவேண்டும்,'' என்கிறார் செல்வப்ரகாஷ்.                                            

மே, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com